புதன், 19 நவம்பர், 2008

இசை‌யோடு குர்ஆனை ஓதலாமா?

அரபியரின் தொனிகளில் திருக்குர்ஆனை ஓதுங்கள் (பெரும் பாவங்களைச் செய்யும்) பாஸிக்குகள், வேதக்காரர்கள் ஆகியோரின் இசைகளில் ஓதாதீர்கள். எனக்குப் பின்னர் ஒரு கூட்டத்தினர் வருவர். அவர்கள், சங்கீத மெட்டுகளில் திருக்குர்ஆனை ஓதுவார்கள். அவர்களின் தொண்டைக் குழிகளைக் கடந்து அது உள்ளே செல்லாது. அவர்களின் இதயங்களும், அவர்களைப் பாராட்டுவோரின் இதயங்களும் சோதனைக் குள்ளாக்கப்பட்டிருக்கின்றன" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு : அபூஹுதைஃபா(ரலி)நூல்கள் : அத்திர்மிதீ, அல் பைஹக்கீஇதனை அல் ஜஅபரீ, மிஷ்காத்துல் மஸாமீஹ் எனும் நூல்களில் காணலாம்.

காலத்தில் திருக்குர்ஆனை நன்கு பயின்றோர் உண்டாவார்கள். அந்த காலத்தை அடைந்தவர்கள் அவர்களை விட்டுக் காவல் தேட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஉமாமா (ரலி) அவர்கள் ரிவாயத்துச் செய்திருப்பதாக அபூநயீம் (ரஹ்) தமது அல்ஹுல்யத் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.என் உம்மத்திலிருந்து ஒரு வர்க்கம் வெகு விரைவில் உண்டாகும். பாலை அவர்கள் குடிப்பது போல திருக்குர்ஆனை அவர்கள் குடிப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அக்பா இப்னு அமீர் (ரலி) அறிவித்திருப்பதாக அல்இமாம் அத்தப்ரானி (ரஹ்) எழுதியுள்ளார்.திருக்குர்ஆனை அழகுபடக் கவர்ச்சிகரமான தொனியில் ஓதுவது பாராட்டத்தக்கது. இதற்காகச் சங்கீத மெட்டுகளில் நீட்ட வேண்டாத இடத்தில் குறுக்கியும், குறுக்க வேண்டாத இடத்தில் நீட்டியும் ஓதுவது கூடாது. இவ்வாறு ஓதுதல் குஃப்ருக்கும் நெருக்கமாக ஆக்கிவிடும். நம் நாட்டிலுள்ள மஸ்ஜிதுகளில் முத்தவல்லிகளில் சிலர் ஐங்காலத் தொழுகைகளை நிறைவேற்றாதவர்களாகவும் திருக்குர்ஆனை ஓதத் தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். பாங்கு என்னும் தொழுகைக்கான அழைப்பு விடும் முஅத்தின் மற்றும் மஸ்ஜிதில் ஐங்காலத் தொழுகைகளை முன்நின்று நடத்தும் இமாம்கள் ஆகியவர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தங்களிடம் வைத்துக் கொண்டு தங்களுக்குப் பணிபுரிபவர்களையும் தங்கள் கருத்துக்கு ஒத்து ஊதுபவர்களையும் முஅத்தினாகவும், இமாமாகவும் நியமிக்கின்றனர். தம்மீது நம்பிக்கை வைத்து முத்தவல்லியாக நியமித்த பொது மக்களின் திருப்திக்காகவாவது வாரத்தில் ஒரு நாள் ஜும்ஆ தொழுகைக்கு வந்து முஅத்தின் பாங்கு சொல்வதையும், இமாம் கிராஆத்து ஓதுவதையும் செவிமடுத்திருந்தால் தம்மால் நியமிக்கப்பட்ட இவர்கள், இப்பதவியை வகிக்க தகுதியுள்ளவர்களா என்பதை சிறிதேனும் உணர்ந்து கொள்ள முடியும்.மஸ்ஜித்துக்குச் சொந்தமான பணத்தை செல்வந்தர் வீண் விரயம் செய்யமாட்டார் என்ற நல்ல எண்ணத்தில் பொதுமக்கள் அவரை முத்தவல்லியாக நியமித்தால் அவர்களின் அந்த எண்ணத்தை கட்டிக்காக்க வேண்டிய கடமை முத்தவல்லிக்கு இருக்கிறது. அவர் தகுதியாக திறமைமிக்க, இறையச்சமுள்ளவராக, திருத்தமாக ஓதுபவராக, மார்க்கச் சட்டங்களைப் புரிந்து பொதுமக்களுக்கு வழி காட்டும் ஆற்றலுள்ளவராக மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதில் பேணுதல் உள்ளவராக இருப்பவர்களைத் தான் பாங்கு சொல்லவும், தொழ வைக்கவும், மஸ்ஜிதின் இதர வேலைகளை நிறைவேற்றவும் நியமிக்க வேண்டும். அதனால் தொழ வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவரும்; ஊர் சிறக்கும். குறைவான சம்பளம் கொடுப்பதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தி, மஸ்ஜிதுக்குச் சொத்துக்களை வாங்கலாம் என்பதைக் காரணமாகக் கொண்டு தகுதியற்றவர்களை இமாமாக நியமித்தால் ஊருக்கும் மக்களுக்கும் கேடு தான் உண்டாகும்.

கருத்துகள் இல்லை: